Sunday, July 3, 2011

பாடப்புத்தகங்களில் போதைப் பொருள் கடத்த முயற்சி




பாடப்புத்தகங்களில் போதைப் பொருள் கடத்த முயற்சி


பாடப்புத்தகங்களில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.


இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை கமிஷனர் சஞ்சய்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:


சென்னை விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் சரக்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 1 ந் தேதி வழக்கம் போல் சோதனையிட்டனர். அப்போது ஐதராபாத்தில் இருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பார்சல் ஒன்று காணப்பட்டது. அந்த பார்சலின் மேல் பாடப்புத்தகங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. பாடப்புத்தகங்களை ஏன் அங்கு அனுப்ப வேண்டும்? என்று அந்த பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.


எனவே அந்த பார்சலை திறந்து புத்தகங்களை எடுத்துப் பார்த்தனர். மேலாக பார்க்கும்போது புத்தகம் போல் காணப்பட்டது. திறந்து பார்த்தபோது, அந்த புத்தகத்தின் நடுவே வெற்றிடத்தை உருவாக்கி அதற்குள் சிறிய பாக்கெட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பாக்கெட்டின் உள்ளே பவுடர் போன்ற பொருள் இருந்தது.


அதை பரிசோதனை செய்ததில் ஹெராயின் என்ற போதைப் பொருள் என்பது தெரிய வந்தது. அதன் எடை 500 கிராம். சர்வதேச சந்தையின் அதன் மதிப்பு ரூ.50 லட்சமாகும். இதை யார் அனுப்பியிருக்கக் கூடும் என்பது பற்றிய விசாரணையை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment