Sunday, July 3, 2011
இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று கூறி ரூ.5 கோடி மோசடி: பெண் கைது
இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று கூறி ரூ.5 கோடி மோசடி
பெங்களூர் கெங்கேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பாபுஷாப் பாளையாவை சேர்ந்தவர் உமாதேவி (வயது 40). இவருடைய கணவர் பலராம் இறந்து விட்டார். கடந்த 2007 ம் ஆண்டு வித்யாரண்யபுராவில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் கட்டிடத்தின் 3 வது மாடியில் எஸ்.எஸ்.எண்டர் பிரைசஸ் என்ற பெயரில் உமாதேவி ஒரு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார்.
அப்போது இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தபடியே, வேலைக்கு எங்கும் செல்லாமல் எளிமான முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்றும், வேலை வாங்கி தருவதாக கூறியும் பத்திரிகை, இன்டர்நெட்டில் உமாதேவி விளம்பரம் செய்தார். இதையடுத்து உமாதேவியை சந்தித்து வேலை கிடைப்பது குறித்தும், எளிதில் பணம் சம்பாதிப்பது குறித்தும் கேட்டார்கள்.
இந்த வேலைகளில் சேர வேண்டும் என்றால் முன்பணமாக ரூ.12 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உமாதேவி நிபந்தனை விதித்தார். வேலை கிடைக்கும் என்ற ஆசையில் ஏராளமானவர்கள் உமாதேவியிடம் பணத்தை கொடுத்தனர். ஆனால் அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவும் இல்லை. வாங்கிய முன்பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
அவர் ரூ.5 கோடி வரை மோசடி செய்திருந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான உமாதேவியை தேடிவந்தனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதே தெரியாமல் இருந்தது. இந்த மோசடி வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, உமாதேவியை பிடிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு ஊட்டியில் உமாதேவி தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் உமாதேவி, மற்றும் மோசடி சம்பவத்திற்கு உதவியாக இருந்த மோகன்குமார், உமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேரையும் பெங்களூருக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் முன்பணம் வாங்கி பல கோடி மோசடி செய்ததை உமாதேவி ஒப்புக் கொண்டார். கைதான 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில் ஒரு விலை உயர்ந்த கார் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
Labels:
இருந்தே,
இன்டர்நெட்,
என்று,
சம்பாதிக்கலாம்,
மூலம்,
மோசடி:,
வீட்டில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment