Sunday, July 3, 2011
வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டர் பலி
வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டர் பலி
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரி மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பள்ளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 51). இவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை இவரும், 4 போலீசாரும் கிருஷ்ணகிரியில் உள்ள டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. எனவே சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அந்த காரின் நம்பரை குறிப்பதற்காக ரோட்டின் எதிர்புறம் திரும்பி நின்றார். அந்த வேளை அதிகாலை நேரம் என்பதால் அவர் நின்ற இடத்தில் வெளிச்சம் மிக குறைவாக இருந்தது. அப்போது ஆந்திரா மாநிலம் சித்தூரில் இருந்து பெங்களூருக்கு கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மீது ஏறியது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்து அவருடன் பணியில் இருந்த சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தை பார்த்து டிரைவர் லாரியை நிறுத்தினார். விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தகவலறிந்த ஏராளமான போலீசார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர்.
விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் ஆந்திரா மாநிலம் குப்பத்தை சேர்ந்த சிவப்பா (30) என்பவரை கைது செய்தனர். விபத்தில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு பிலோமினா என்ற மனைவியும் 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். மூத்த மகன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியிலும், 2-வது மகன் ஆனந்த் மதுரை மருத்துவக் கல்லூரியிலும், 3-வது மகன் அருண் பி.எஸ்.சி. பட்டப்படிப்பும், மகள் அனுசுயா 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
Labels:
சப்-இன்ஸ்பெக்டர்,
சோதனையின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment