Sunday, July 3, 2011

சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது கொலை மிரட்டல் வழக்கு; கைது - விசாரணை


சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது
கொலை மிரட்டல் வழக்கு; கைது - விசாரணை



நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தயாரிப்பாளர் செல்வராஜ்,  தன்னிடம் 90 லட்சம் மோசடி செய்து விட்டார் என்று  சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ்

சக்சேனா மீது  புகார் செய்திருந்தார்.


மேலும் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். 


இதையடுத்து ஏமாற்றுதல், மோசடி, மிரட்டல், கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளில் சக்சேனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதன் அடிப்படையில் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவிடம் கடந்த 2 நாட்களூக்கு முன்பு சிபிஐ விசாரணை

நடத்தியது.


இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார் சக்சேனா.   அப்போது விமான நிலையத்திலேயே  சக்சேனா கைது செய்யப்பட்டார்.


அசோக்நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சக்சேனாவிடம் விசாரணை நடைபெற்றது.


சைதாப்பேட்டை 9வது நீதிமன்ற நீதிபதி வீட்டில் சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார்.

அரசு கேபிள் டி.வி. கழகத்துக்கு நிர்வாக இயக்குனர்


அரசு கேபிள் டி.வி. கழகத்துக்கு நிர்வாக இயக்குனர்

தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட அரசாணையில், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் ஹேமந்த்குமார் சின்ஹா, வணிகவரித்துறை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை கமிஷனராக இருந்த எஸ்.கிருஷ்ணன், நிதித்துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
நிதித்துறை இணை செயலாளர் ஆர்.கிர்லோஷ்குமார், வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

பொதுத்துறை இணைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, வணிகவரித்துறை இணை கமிஷனராக (அமலாக்கம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தொழிலாளர் மற்றும் நியமனத்துறை இணைச்செயலாளர் எம்.ஜெயராமன், அரசு கேபிள் டி.வி. கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், அரசு கேபிள் டி.வி. கழகத்தின் தலைவராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டர் பலி


வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டர் பலி

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரி மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பள்ளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 51). இவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை இவரும், 4 போலீசாரும் கிருஷ்ணகிரியில் உள்ள டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. எனவே சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அந்த காரின் நம்பரை குறிப்பதற்காக ரோட்டின் எதிர்புறம் திரும்பி நின்றார். அந்த வேளை அதிகாலை நேரம் என்பதால் அவர் நின்ற இடத்தில் வெளிச்சம் மிக குறைவாக இருந்தது.

 

அப்போது ஆந்திரா மாநிலம் சித்தூரில் இருந்து பெங்களூருக்கு கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மீது ஏறியது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்து அவருடன் பணியில் இருந்த சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்து டிரைவர் லாரியை நிறுத்தினார். விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தகவலறிந்த ஏராளமான போலீசார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர்.


விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் ஆந்திரா மாநிலம் குப்பத்தை சேர்ந்த சிவப்பா (30) என்பவரை கைது செய்தனர். விபத்தில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு பிலோமினா என்ற மனைவியும் 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். மூத்த மகன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியிலும், 2-வது மகன் ஆனந்த் மதுரை மருத்துவக் கல்லூரியிலும், 3-வது மகன் அருண் பி.எஸ்.சி. பட்டப்படிப்பும், மகள் அனுசுயா 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இலவச பஸ் பாஸ் :ஜெ. இன்று தொடங்கி வைக்கிறார்



இலவச பஸ் பாஸ் :ஜெ. இன்று தொடங்கி வைக்கிறார்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

 

அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கல்வி கிடைக்கும் வகையில் இலவச பஸ் பாஸ் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் தங்கள் வீட்டில் இருந்து பள்ளி சென்றுவருவதற்காக இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இந்த பஸ் பாசை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் மாணவ-மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இலவ பஸ் பாஸ் திட்டத்திற்கும் ஆகும் செலவை தமிழக அரசு சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு வழங்கிவிடும்.

 

ஆண்டுதோறும் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தினால் பயன்பெறுகிறார்கள். இதற்காக அரசு சுமார் ரூ.310 கோடி செலவு செய்கிறது.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


மாணவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் படிக்கின்ற கல்வி நிறுவனத்திற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் குறிப்பிட்ட நாளில் சென்று போட்டோ எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டோ எடுக்கும் நாளில் பள்ளிக்கு வராதவர்களுக்கு புதிதாக ஒரு நாள் ஒதுக்கி படம் எடுக்கும் வகையில் அதிகாரிகள் மாற்று ஏற்பாடும் செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். தற்போது அரசு விழாக்கள் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையாக நடைபெற்று வருவதுபோல் இந்த நிகழ்ச்சியும் எளிமையான முறையில் நடக்கும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு 81 பேர் வரவில்லை


என்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு 81 பேர் வரவில்லை


தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பிளஸ்-2 படிப்பில் தொழில்கல்வி படித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது.

நேற்று 691 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 81 பேர் வரவில்லை. வந்தும் 10 பேர் இடத்தை தேர்வு செய்யாமல் சென்றனர். இவர்கள் வேறு படிப்புக்கு சென்றிருக்கலாம்.

நேற்று 604 பேர் இடங்களை தேர்ந்து எடுத்தனர்.


இதுவரை நடந்த 3 நாள் தொழில்கல்வி கவுன்சிலிங்கில் 1,709 பேர் அழைக்கப்பட்டதில் 140 பேர் வரவில்லை. 1,559 பேர் கல்லூரிகளையும், பிரிவையும் தேர்ந்து எடுத்தனர்.


மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் பொதுகவுன்சிலிங் தொடங்குகிறது.


 


 
 

 


 
 

 

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைபெய்யும்



தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைபெய்யும்


தமிழ்நாட்டில் இப்போது தென்மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது.


ஆனால் போதிய அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. அரபிக்கடலில் இருந்து வரக்கூடிய காற்றின் ஈரப்பதம் குறைவாக உள்ளது.
 
அதன்காரணமாக தமிழ்நாட்டில் வழக்கமான கோடை போய், மீண்டும் 2-வது கோடை காலம் வந்துவிட்டது போல கடந்த 10 நாட்களாக வெயில் வறுத்து எடுத்தது. பகலில் வெயில் அதிக கடுமையாகவும் இரவில் காற்று குறைவாகவும் இருந்தது.

இதனால் மின் விசிறிகூட அதிக வெப்பத்தைதான் கக்கின. அதன் காரணமாக நிம்மதியான தூக்கம் வராமல் சிரமப்பட்டனர்.

 

அதற்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் தமிழ்நாட்டில் வேறு சில இடங்களிலும் மழைபெய்தது.

நேற்று முன்தினம் திருவள்ளூரில் 5 செ.மீ.மழை பெய்துள்ளது. சென்னை விமானநிலையம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், பரங்கிப்பேட்டை தலா 4 செ.மீ., செம்பரம்பாக்கம் 3 செ.மீ., நுங்கம்பாக்கம், தேன்கனிக்கோட்டை தலா 2 செ.மீ., காஞ்சீபுரம், திருத்தணி, பூண்டி தலா 1 செ.மீ.பெய்துள்ளது.

சென்னையில் நேற்று காலை சில பகுதிகளில் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், திருவான்மியூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம் உள்பட பல இடங்களில் மழை பெய்தது.

 

இன்றைய வானிலை குறித்து வானிலை அதிகாரி கூறுகையில், `தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழைபெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்ய வாய்ப்பு உள்ளது' என்றார்.

ஜெ. அதிரடி : விழாவுக்கு போனபோது பதவி பறிக்கப்பட்டது



ஜெ. அதிரடி :  விழாவுக்கு போனபோது பதவி பறிக்கப்பட்டது

அமைச்சராக இருந்த இசக்கிசுப்பையாவின் பதவி பூலித்தேவன் விழாவில் கலந்துகொண்டுவிட்டு கிளம்பியபோதுதான் பறிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நேற்று மாலையில் நடந்தது. நெல்லையில் நெல்லையப்பர் தேரோட்ட விழாவையொட்டி நடக்கும் முக்கியமான அரசு விழாவாகும் இது.

இதில் பங்கேற்பதற்காக செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் நெல்லை வந்திருந்தார். நேற்று காலையில் சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி, அமைச்சர் சுப்பையா ஆகியோருடன் ஆய்வில் ஈடுபட்டார்.

பின்னர் மதியம் நெற்கட்டான்சேவலில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.


அந்த விழாவில் மூவரும் அமைச்சராக பங்கேற்றனர். சுப்பையா அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டு நெல்லையில் மாலையில் நடக்கும் அரசு பொருட்காட்சிவிழாவில் பங்கேற்க வருவதாக கூறிவிட்டு சென்றார்.


அவர் கிளம்பிய சிறிதுநேரத்திலேயே அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட செய்தி வெளியானது. சுப்பையாவிடம் பறிக்கப்பட்ட பதவி சற்று முன்னருடன் அவருடன் இருந்த அமைச்சர் செந்தமிழனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.


மாலையில் அரசு விழாவிற்கு வருவதாக கூறிவிட்டு சென்ற சுப்பையா, தமக்குஅரசு வழங்கியிருந்த காரையும், பாதுகாப்பு போலீசாரையும் மதியமே அனுப்பிவைத்தார்.


மாலை அரசு விழாவில் அவர் பங்கேற்கவில்லை.நெல்லை அரசு விழாவில் பங்கேற்ற செந்தமிழன், கருப்பசாமி ஆகியோர் பெயரளவுக்கு கூட புன்னகைக்குவில்லை.


விழாவும் அநியாயத்திற்கு அமைதியாக நடந்தது.  நெல்லைக்கு வந்த நேரத்தில் கூடுதல் பொறுப்பு கிடைத்ததற்காக மகிழ்வதா..மதியம் வரை உடன் இருந்து பார்த்த அமைச்சரை மாலையில் காணவில்லையே என வருத்தப்படுவதா என தெரியாமல் அமைச்சர் செந்தமிழன் டென்ஷனாகவே இருந்தார்.